காதல் அத்தியாயங்கள்
கடவுளே,
நான் காதலனாய் வாழ்வேன் என்றால் மட்டும் பிறக்க விடு,
இல்லையேல் கருவிலே என்னை அழித்து விடு.
அத்தியாயம் - 3
சென்னையில் வேலைக்கு சென்ற புதிதில் பொங்கலுக்கு ஊருக்கு வந்த நான் உன்னையும் பார்க்க வந்தேன். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த நீ என்னை கண்டவுடன், "எப்படி இருக்கீங்க, பட்டிணமெல்லாம் எப்படி இருக்கு?" என்றாய்.
உன்னை சீண்டி பார்க்க வேண்டி,"ஊரும் நல்லா இருக்கு, பொண்ணுங்களும் செமையா இருக்காங்க" என்றேன்.
சட்டென்று வாடிய முகத்துடன்,"செமையா இருக்காங்கனா எப்படி, எதுல?" என்றாய்.
நானும் விடாமல், "ஆகா....அவங்களோட லொ-கட் டாப்சும், தொப்புள் தெரியிற மாதிரி எப்ப வேணாலும் கீழ விழற பேண்ட்ம், வாய் நிறைய இங்கீலீசும், அடடா...மனசுல நிக்குது" என்றேன்.
கண்களில் நீர் முட்ட," நானெல்லாம் அப்ப உங்களுக்கு இனிமே தேவையில்லை. அங்கேயே எவளையாவது கட்டீகீங்க.இங்க இருக்குற தாவணி,சேலையெல்லாம் உங்களுக்கு அலுத்திருக்கும். என்னை இனிமே பார்க்க வரவேண்டாம்" என முடிக்கும்போது அழுதுவிட்டாய்.
இதற்கு மேல் உன்னை துன்புறுத்த விரும்பாமல்,"கண்ணம்மா, இப்ப நான் என்ன சொல்லிடேன்னு அழற, ஆயிரம்தான் அவங்க அப்படியிருந்தாலும் என் தேவதைப்போல வருமா. இதுக்கு போய் என்னைய வரவேண்டாம்ன்னு சொல்ற, அப்ப நான் நாளை உங்க வீட்டுக்கு வர வேண்டாமா?"என்றேன்.
நீ ஆச்சரியத்துடன்," எங்க வீட்டுக்கு எதற்கு? என்னை மாட்டிவிடறதுக்கா?" என்றாய்.
"உங்க வீட்ல உன்னைய பொண்ணு கேட்கலாம்ன்னுத்தான்"
"அப்படியா, உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு ஓத்துக்கிட்டாங்களா?" என்றாய் முகமலர்ச்சியுடன்.
"ஆமாம், அதச்சொல்லத்தான் வந்தேன்"
"அதத்தானே முதல்ல சொல்லனும்.என்னை அழ வைச்சி அப்புறமா சொல்றீங்க. நீங்க சும்மாத்தான் அந்த பொண்ணுங்க பத்தி சொல்றீங்கன்னு தெரியுது. ஆனாலும், விளையாட்டுக்கு கூட என்னை ஓதுக்குறமாதிரி பேசும் போது வருத்தமாயிருக்கு" என்றாய்.
என்னவளே! காதல் என்பது அப்படித்தான், கண்ணாமூச்சி விளையாட்டுப்போல. ஊடலுக்கும், கூடலுக்கும்யிடையில் இருந்து விளையாடி பார்க்கும்.